செல்போன் திருடிய காதலர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 16-ஆம் தேதி பயணி ஒருவரின் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பயணி உடனடியாக ரயில்வே காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் மூலம் கண்காணித்து வந்தனர். அப்போது பெண் உள்ளிட்ட 2 பேர் பயணி ஒருவரிடம் செல்போன் திருடுவதை பார்த்தனர். இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் அந்த வாலிபர் திருவொற்றியூரை சேர்ந்த பார்த்திபன் என்பதும், அந்த பெண் பார்த்திபனின் காதலி என்பதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.