Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தொடர்ந்து பெய்துவரும் மழை… முழுகொள்ளவை எட்டிய மிருகண்டா அணை… விவசாயிகள் மகிழ்ச்சி…!!

மிருகண்டா அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் வினாடிக்கு சுமார் 600 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கலசபாக்கத்தை அடுத்துள்ள ஜவ்வாது மலை பகுதியில் உள்ள மிருகண்டா அணை தற்போது முழு கொள்ளளவு வரை நிரம்பியுள்ளது. இந்நிலையில் அணையின் பாதுகாப்பு குறித்து பொதுப்பணித்துறை உதவி செயல் பொறியாளர் செல்வராஜ் அணையில் இருந்து வினாடிக்கு 600 அடி கன அடி நீர் வெளியேற்ற முடிவு செய்துள்ளார். அதன் அடிப்படையில்  திமுக எம்.எல்.ஏ சரவணன் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.

இதனையடுத்து நவாப்பாளையம் பெரிய ஏரிக்கு செல்லும் கால்வாயில் சிலர் ஆக்கிரமிப்பு செய்ததால் அப்பகுதியில் அடைப்பு ஏற்பட்ட நிலையில் தண்ணீர் செல்ல முடியாமல் தண்ணீர் வெளியேறியுள்ளது. இதனால் அப்பகுதியில் 30 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த எம்.எல்.ஏ சரவணன் அப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். மேலும் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுப்ரமணியன் உட்பட அதிகாரிகள் பலரும் உடன் இருந்துள்ளனர். இதற்கிடையே கலசபாக்கம் செய்யாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் செய்யாற்றில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் தண்ணீர் முழுவதுமாக நிரம்பியதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Categories

Tech |