தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள வேதாரண்யம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அதனை வெளியேற்றுவதற்காக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். வேதாரண்யம் பகுதியில் 5000 ஏக்கர் சம்பா சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கனத்த மழையால் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
தேத்தாகுடி ரயில்வே சுரங்கப்பாதையில் 5 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேத்தாகுடியிலுள்ள காந்திநகரில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கியுள்ளது. இதனை மோட்டார் மூலம் வெளியேற்றுவதற்காக ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் முயன்று வருகின்றனர். மேலும் தொடர் கனமழை காரணமாக ஆறுகாட்டுத்துறை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், கோடியக்கரை பகுதியிலுள்ள மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வலைகளைப் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.