திமுக சார்பில் சென்னை கொளத்தூர் பகுதியில் போட்டியிட மு க ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது என்ற விவரங்களையும் அறிவித்து வருகின்றது.
திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இந்நிலையில் கொளத்தூர் பகுதியில் மூன்றாவது முறை போட்டியிட திமுக தலைவர் மு க ஸ்டாலின் விருப்ப மனு அளித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி இடம் மு க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினார். ஏற்கனவே கொளத்தூர் பகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு மு.க.ஸ்டாலின் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.