தொடர் கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ஏரி குளங்கள், குட்டைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 14- ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. இந்த மழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கின்றது. கடந்த 14ஆம் தேதி வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வருகின்றன. நேற்று முன்தினம் மாலை அணையின் நீர்மட்டம் 48.5 அடி. பொதுவாக அணையின் நீர் மட்டம் 48 அடியை தாண்டினால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
தற்சமயம் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு இரண்டாவது தினமாக நேற்று முன்தினம் மாவட்ட நிர்வாகம் சார்பாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தென்பெண்ணை ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ போகக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தாழ்வான பகுதியில் இருக்கின்ற மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் பெய்த கனமழை விவரம்: தேன்கனிக்கோட்டை 54 மில்லி மீட்டர், பெனுகொண்டாபுரம் 55.40 மில்லிமீட்டர், பாரூர்- 73 மில்லி மீட்டர், கிருஷ்ணகிரி -38.80 மில்லி மீட்டர், சூளகிரி- 40 மில்லி மீட்டர், நெடுங்கல் -30 மில்லி மீட்டர், போச்சம்பள்ளி- 30 மில்லி மீட்டர், ராயக்கோட்டை -27 மில்லி மீட்டர், அஞ்செட்டி- 8.60 மில்லி மீட்டர், ஊத்தங்கரை -13 மில்லி மீட்டர், தளி- 5 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.