தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நீலகிரியிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது. இதனால் நிலத்தில் அதிக ஈரப்பதம் ஏற்பட்டு அங்கங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகின்றது. அத்துடன் சில இடங்களில் வீடுகளும் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கோத்தகிரியில் பெய்த மழையில் குஞ்சப்பனை பழங்குடியின கிராமத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தடுப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்தவுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணிகளை மேற்கொண்டனர். மேலும் தடுப்பு சுவரை புதுப்பிப்பதற்கு உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக நேற்று பள்ளி விடுமுறை என்பதால் தடுப்பு சுவர் இருந்து விழுந்ததில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.