கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (04.11.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கி பெய்து வரக்கூடிய நிலையில், சென்னையில் நாளை (04.11.22) ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த மூன்று நாட்களாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல செயல்பட்டது. மழை சற்று குறைவாக இருந்தது. ஆனால் இன்று மாலை தொடங்கிய மழை தற்போது வரை பெய்து வருகிறது.
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. இன்று மதியம் தொடங்கிய மழை சென்னையில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக பெய்து வரக்கூடிய காரணத்தால் அரசு பள்ளிகள், தாழ்வான பகுதிகளில் இருக்கக்கூடிய சாலைகள் எல்லாம் மழை நீரால் மூழ்கி இருக்கிறது. எனவே சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முன்னதாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை (04.11.2022) மற்றும் நாளை மறுநாள் (05.11.202) இரு நாட்களும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.