இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து ஐநா கவலை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக 19 வயது இளம்பெண் ஒருவர் கொடூரர்கள் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதுடன் கொலை செய்யப்பட்டிருந்தார். அதைத்தொடர்ந்து அதே உத்தரப் பிரதேசத்திலும், மத்திய பிரதேச பகுதிகளிலும், ஏன் தமிழகத்திலும் கூட அடுத்தடுத்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
இது குறித்து பல பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் இதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து, தங்களது கருத்துக்களையும், கண்டனங்களையும் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக ஐநா கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக பின்தங்கிய வகுப்பினர் பாதிக்கப்படுவதாகவும், குற்றவாளிகளை விரைவில் நீதி முன் நிறுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இந்தியாவில் பெண்கள், ஒடுக்கப்பட்ட பிரிவினர் மீதான ஒடுக்குமுறை குறித்த சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக உலக நாடுகள் பார்வையில் திகழ்வதாக சமூக ஆர்வலர்கள் ஒருபுறம் வேதனை தெரிவித்து வருகின்றனர்.