Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தொடர் நாயகன் விருது…. “நான் சூர்யகுமாரை தேர்வு செய்வேன்”….. ஓப்பனாக புகழ்ந்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்..!!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தொடர் நாயகன் விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல்  ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் யார் அதிக வாக்குகளை பெறுகிறார்களோ அவர்களுக்கு தான் ஐசிசி தொடர் நாயகன் விருது வழங்கப்படும்.

அதில் இந்திய அணியில் இருந்து இந்த டி20 தொடரில் அதிக ரன்கள் அடித்திருக்கும் விராட் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவும் இடம் பெற்றுள்ளனர். அதேபோல பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், ஷாஹீன் அப்ரிடி, இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான சாம் கரன், கேப்டன் ஜாஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் ஜிம்பாப்வே அணி வீரர் சிக்கந்தர் ராசா, இலங்கை அணி வீரர் வனிந்து ஹசாரங்கா ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.

எனவே ஐசிசி யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று ரசிகர்கள் விரும்பும் வீரர்களுக்கு வாக்களிக்கலாம். இறுதிப்போட்டி முடிந்த பின் கோப்பை வழங்குவதற்கு முன் தொடர் நாயகன் யார் என்று அறிவிக்கப்படுவார்கள்.  இந்நிலையில் பாகிஸ்தானுடன் இறுதி போட்டியில் மோதும் இங்கிலாந்து அணி கேப்டன் ஜாஸ் பட்லர் உலகக் கோப்பை தொடரின் தொடர் நாயகன் யார் என தெரிவித்துள்ளார்.

இது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியதாவது, என்னை பொருத்தவரை நான் சூர்யகுமார் யாதவை தான் தொடர் நாயகனாக தேர்வுசெய்வேன். சூர்யா மிகவும் சுதந்திரமாக ஆடினார். கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்டோர் ஒரு அணியில் இருக்கும் போது அவர் ஆடிய விதத்தை பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக இருந்தது. அற்புதமாக ஆட கூடிய வீரர் என புகழ்ந்து பேசினார்.

மேலும் சாம் கரன் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகிய இருவரும் தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர்கள் தான். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி போட்டியில் அவர்கள் சிறப்பாக ஆடினால் அவர்களுக்கும் தொடர் நாயகன் விருதை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார். தொடர் நாயகன் விருதுக்கான போட்டியில் பட்லரும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஷதாப் கானை தொடர் நாயகன் விருதுக்கு தகுதியானவர் என தெரிவித்திருந்தார்.

Categories

Tech |