தொடர் மழையின் காரணமாக பாலம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு ஏற்பட்டு 5 இடங்களில் உள்ள பால்ம் உடைந்து விழுந்தது. இதேப்போன்று கூடலூரில் உள்ள ஆணை செத்த கொல்லி பகுதியில் அமைந்துள்ள பாலத்திலும் மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக பாலம் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இருப்பினும் பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வருகிறது. இதன் காரணமாக பாலம் உடைந்து விழுவதற்கு முன்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இரவு நேரங்களில் குறிப்பாக விபத்து ஏற்படும் அபாயம் அதிக அளவில் இருப்பதாகவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.