தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கேரள மாநிலம் வயக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கர்நாடக மாநில மலை மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது.அதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டு அணைகளும் முழுமையாக நிரம்பிய நிலையில் அணைகளின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் கர்நாடகா மற்றும் தமிழக எல்லையான பிழி குண்டுளு வழியாக காவிரி ஆற்றில் கரைபுரண்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரானது வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது.