நீர்த்தேக்க தொட்டியில் கொக்கு இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் புழுக்கள் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தொட்டியை திறந்து பார்த்தபோது அதில் கொக்கு ஒன்று இறந்து கிடந்துள்ளது.
இதுகுறித்த்து தகவலறிந்த மருத்துவ அலுவலர் ரமேஷ் குமார், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீர்த்தேக்க தொட்டியை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனையடுத்து தொட்டியில் பிளீச்சிங் பவுடர் தூவி 4 முறை சுத்தம் செய்யப்பட்டது. மேலும் அரசு மருத்துவ அலுவலர் சான்றிதழ் அளித்த பின்னர் பொதுமக்களுக்கு தொட்டியில் இருந்து தண்ணீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.