தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தொடர்கிறது என்று மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அனைத்து கட்சியினரும் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பிரசாரத்தில் இன்று பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் தொடர்கிறது. அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தால் 500 ரூபாய், பெண் குழந்தை பிறந்தால் 300 ரூபாய் வாங்குகின்றனர். ரஜினி கட்சி தொடங்குவது பற்றி யூகத்தின் அடிப்படையில் பதில் கூற முடியாது. அவரின் உடல் நலமே முக்கியம்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.