9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக, அதிமுக என பல்வேறு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். தென்காசி, நெல்லை மாவட்டங்களில் ஊராட்சி வார்டுகள் கவுன்சிலர் தொடங்கி மாவட்ட கவுன்சிலர் வரையிலான பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அழைத்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்தினார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள பதவிகளில் வெற்றிபெற அதிமுக வேட்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “இது ஒரு அற்புதமான பணி. இந்த பணி செய்கின்ற பொழுது மக்கள் மனதிலே இடம் பெறுவீர்கள். மக்களிடத்தில் செல்வாக்கு பெறுவீர்கள். ஆகவே நேரடியாக செல்வாக்கு பெறக்கூடிய ஒரே அமைப்பு உள்ளாட்சி பொறுப்புதான் வேறு எந்தப் பொறுப்பும் கிடையாது.
அதுமட்டுமல்ல சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெறலாம், நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெறலாம் ஆனால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது என்றால் சாதாரண விஷயமல்ல கடினமான விஷயம். அந்தக் கடினமான பொறுப்புக்கு நீங்கள் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறீர்கள். அதை உணர்ந்து இரவு பகல் பாராமல் தேனீக்களைப் போல, எறும்புகள் போல சுறுசுறுப்பாக செயல்பட்டு சிந்தாமல் சிதறாமல் நமக்கு கிடைக்கப் போகின்ற வாக்குகளை பதியவைக்க வேண்டும்” என கூறினார்