அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை வரவேண்டாம் என அதிமுக சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன்தினம் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பித்தார். அதில் அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரியும், சாவியை எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் கொடுக்கக் கோரியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். ஒரு மாதத்திற்கு அதிமுக அலுவலகத்திற்கு தொண்டர்கள் யாரையும் அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தது.
சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நேற்று அகற்றப்பட்டது. அதையடுத்து எடப்பாடி பழனிச்சாமியின் மேனேஜரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்று அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் ‘நீதிமன்ற ஆணைப்படி கழக தொண்டர்களும், ஆதரவாளர்களும் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தலைமை கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’ என அந்த அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது.