பிஸ்கட் கவரை வாயில் திணித்து குழந்தை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் கால் டாக்சி டிரைவரான நித்யானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நந்தினி தனது ஒரு வயது குழந்தையான துர்கேசை அழைத்துக் கொண்டு தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த நந்தினி வேலைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது தனது குழந்தை குறித்து தாயான நாகலட்சுமியிடம் நந்தினி கேட்டுள்ளார். அதன்பிறகு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை அசைவற்று கிடப்பதை பார்த்து நந்தினி அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த அறிக்கையில் குழந்தையின் உடல் முழுவதும் அடித்தற்கான சிறுகாயங்கள் இருந்ததோடு, தொண்டைக்குழியில் பிஸ்கட் பேப்பர் திணிக்கப்பட்டு குழந்தை கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் குழந்தையின் பாட்டியான நாக லட்சுமியை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அதிக அளவில் குறும்பு செய்த துர்கேசை தான் அடித்து துன்புறுத்தியதாகவும், மலம் கழித்துவிட்டு கழிவுகளை குழந்தை வாயில் வைத்தால் கோபத்தில் குழந்தையை அடித்ததாகவும் கூறியுள்ளார்.
இதனை அடுத்து பிஸ்கட் கவரை வாயில் வைத்து குழந்தை கடித்து கொண்டிருந்ததை நாகலட்சுமி பார்த்துள்ளார். இதனால் நாகலாட்சுமி விரலால் அந்த பேப்பரை தொண்டைக்குழி வரை தள்ளி விட்டு குழந்தையை தொட்டியில் போட்டுள்ளார். அதன் பிறகு குழந்தை இறந்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.