பள்ளியில் நடத்தப்பட்ட தொல்லியல் பொருள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பொருட்களை மாணவ மாணவிகள் கண்டு ரசித்தனர்.
ராமேஸ்வரம் மாவட்டத்தில் புது ரோடு பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று தொல்லியல் பொருள்கள் கண்காட்சி மற்றும் தொன்மை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா நடந்துள்ளது. இதில் பள்ளி ஆசிரியர் ஜோஸ்பின் ஜனோபா தலைமை தாங்கி ஆசிரியர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்துள்ளார். மேலும் இந்த விழாவில் தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கலந்துகொண்டு சிறப்பு உரையாற்றியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது “கீழடி அகழ்வாராய்ச்சிக்குப் பின் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இடையே தொல்லியலை பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
மேலும் பள்ளிகளில் செயல்பட்டு வரும் தொல்லியல் கண்காட்சி பயிற்சிகள் மூலம் மாணவர்கள் இடையே தொல்லியல் அகழாய்வு மற்றும் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் இந்தப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த தொல்லியல் கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பழமையான பழைய மற்றும் புதிய நுண் கற்கால கருவிகள், சேதுபதி கோட்டைகள், உலக பாரம்பரிய சின்னங்கள், குடைவரை கோவில்கள் மற்றும் கருப்பு சிவப்பு நிற பானைகள் மற்றும் அறிய புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன. இதனை மாணவ மாணவிகள் அனைவரும் கண்டு ரசித்தனர்.