நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனையடுத்து பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
கிட்டத்தட்ட பெட்ரோல் டீசல் விலை ஆனது தங்கத்தின் விலைக்கு சவால்விட்டு வருகிறது. ஆனால் இதை குறைக்க வேண்டிய மத்திய அரசோ முந்தைய அரசின் மீது பழியை போட்டு அமைதி காத்து வருகிறது. தடுப்பூசியை இலவசமாக பெற வேண்டும் என்றால் பெட்ரோலுக்கு அதிக வரி மக்கள் கொடுத்தாக வேண்டும் என்று மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் விளக்கம் கொடுக்கிறார். மக்களிடமே வரியை வாங்கிவிட்டு தடுப்பூசி எப்படி இலவசமாகும் என்பதை அவர் மறந்துவிட்டார் போல் இருக்கிறது.
இந்த நிலையில் இதனை விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரியங்கா காந்தி, பொதுமக்களுக்கு இடையூறு கொடுப்பதில் பிரதமர் மோடி அரசு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கின்றனர். அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. ஒரு வருடத்தில் வரலாறு காணாத அளவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது. இது மோடி அரசின் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார்.