தனியார் தொழிற்சாலையின் கழிவுநீரால் குளத்தில் ஏராளமான மீன்கள் செத்துக் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலி மலை அருகில் 40 ஏக்கர் பரப்பளவில் வேலூர் சின்ன குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் உள்ள நீரை அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் நிலங்களுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த குளத்தில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளத்தின் அருகே சென்று பார்த்தபோது, அந்த குளத்தில் கெண்டை, விரால், குரவை உள்ளிட்ட மீன்களும் அதனுடன் சேர்ந்து பாம்பும் செத்து கரையோரம் மிதந்து கிடந்தது.
இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறியதாவது, குளத்தின் அருகில் செயல்பட்டு வரும் உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் நச்சு கழிவு இந்தக் குளத்தில் கலப்பதால் தான் இந்த மீன்கள் செத்துப் போனது என்றனர். மேலும் இந்த குளத்தில் இருந்து விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதால் பயிர்கள் நாசமாகும் நிலை ஏற்படும் என்றும், கால்நடைகள் இந்த நீரை குடிப்பதால் உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் சார்பாக இந்த பிரச்சினை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்த தொழிற்சாலையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கண்டன போராட்டம் நடத்தினார்கள். மேலும் இந்த கழிவுநீரை 15 நாட்களில் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்த தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.