தொழிலாளர்களின் பங்கு தொகையை செலுத்தாமல் பணத்தை மோசடி செய்த தனியார் நிறுவன அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம், போத்தனூரில் தனியார் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் அந்தோணி. இவர் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தவேண்டிய பணத்தை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளார். இந்நிலையில் வருங்கால வைப்பு நிதி அலுவலக அதிகாரிகள் மைதிலிதேவி, விஜயலட்சுமி ஆகியோர் ஆய்வு நடத்தியபோது அந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய பங்கு தொகையை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக தனியார் நிறுவனத்தில் விசாரணை செய்தபோது, தொழிலாளருக்கு செலுத்த வேண்டிய பங்கு தொகையை அந்தோணி வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் செலுத்தாமல் தனது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த தனியார் நிறுவனத்தினர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து அந்தோணியை கைது செய்துள்ளனர்.