பெங்களூரில் ஆயத்த ஆடைத் தொழிற்சாலை தொழிலாளியை அடித்து கொலை செய்த மூன்று திருநங்கைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநகர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் உள்ள ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராம நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மயங்கிய நிலையில் இருந்த ராஜேந்திராவை திருநங்கைகள் 3 பேர் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பின்னர் மருத்துவர்கள் இதுகுறித்து திருநங்கைகளிடம் கேட்டபோது, அவர்கள் 3 பேரும் சந்தேகம் அளிக்கும் வகையில் பதில் அளித்ததால், மருத்துவர்கள் உடனடியாக ராமநகர் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின்பேரில் மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர் 3 திருநங்கைகளிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர் காவல்துறையினர் 3 பேரையும் கைது செய்துள்ளனர். பின்னர் மேற்கொண்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயத்த ஆடை தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த ராஜேந்திரா, மாலையில் வேலை முடிந்தவுடன் திருநங்கை போல வேடமிட்டு பெங்களூரு நைஸ் ரோட்டில் நின்று வாகன ஓட்டிகளிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளார். அதனால் திருநங்கைகள் ஆன தேவி, பாவனா, நித்யா ஆகிய மூவருக்கும் வருமானம் குறைந்துள்ளது. அதுமட்டுமன்றி இராஜேந்திரா, திருநங்கை போல வேடமிட்டு வாகன ஓட்டிகளிடம் பணம் பெற்று வந்ததை மூவரும் அறிந்துள்ளனர்.
இந்நிலையில் நைஸ் ரோட்டில் நின்று கொண்டிருந்த ராஜேந்திராவிடம், திருநங்கைகள் 3 பேரும் இதுகுறித்து கேட்டபோது, அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அச்சமயத்தில் ஆத்திரமடைந்த திருநங்கைகள் 3 பேரும் ஒன்றாக இணைந்து ராஜேந்திராவை பலமாக தாக்கியுள்ளனர். அதனால் மயக்கமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார். அதனால் மூன்று திருநங்கைகளும் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். சம்பவம் பற்றி ராமநகர் காவல்துறையினர், எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பின்னர் ராம நகருக்குச் சென்ற எலக்ட்ரானிக் சிட்டி காவல்துறையினரிடம் 3 திருநங்கைகளையும் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மூன்று திருநங்கைகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.