தொழிலாளியை குத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலம் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இரு தரப்பினருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இந்த தேர்தலில் அய்யாசாமி தரப்பினர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வரதராஜ் தரப்பினர் தோல்வி அடைந்துள்ளனர். இதனால் இந்த இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அய்யாசாமி தரப்பை சேர்ந்த 45 வயதான பழனி என்பவர் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் பழனியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அய்யாசாமி குழுவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பழனியை அரிவாளால் வெட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அதைப்பார்த்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன்பிறகு விருதாச்சலம் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அவர் பழனியை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்பிறகு போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.