ஆயுத பூஜையை முன்னிட்டு தூய்மைப் பணியாளர் குப்பைத் தொட்டிக்கும் துடப்பத்திர்க்கும் மாலை போட்டு பூஜை செய்த புகைப்படம் வைரல் ஆகியுள்ளது
தற்போதைய காலம் விழாக் காலம் ஆகும். நவராத்திரியில் தொடங்கி தீபாவளி வரை எங்கு பார்த்தாலும் விழாக்கோலமாக தான் காணப்படும். அதிலும் ஆயுத பூஜை என்று வந்துவிட்டால் தொழிலாளர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக தான் இருக்கும். தங்கள் தொழிலில் பயன்படுத்தும் பொருட்களுக்கு அலங்காரம் செய்து பொட்டு வைத்து மாலை போட்டு கொண்டாடி மகிழ்வார்கள். அவ்வகையில் ஆயுத பூஜையை தூய்மைப் பணியாளர் ஒருவர் கொண்டாடிய புகைப்படம் தற்போது சமூக வளைதளத்தில் வைரல் ஆகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் அவர் அமைதியாக இருந்து துடைப்பத்திற்கும் குப்பைத் தொட்டிக்கும் மாலை போட்டு பூ வைத்து பொட்டு வைத்து பூஜை செய்கிறார். மனிதர்களின் வாழ்வாதாரம் அவர்கள் செய்யும் தொழிலில் இருந்து முன்னேறும் என்றால் தொழிலுக்குத் தேவையான பொருட்களையும் மதிக்க வேண்டியது அவசியம். அதனை போற்றும் வகையில்தான் ஆயுதபூஜை கொண்டாடப்படுவதாக கூறப்படுகின்றது.
இந்த தூய்மைப் பணியாளருக்கு செய்யும் தொழில்தான் தெய்வமாக தோன்றியுள்ளது. அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது .கொடும் தொற்று பரவும் காலத்தில் மருத்துவர்களுக்கு இணையாக களத்தில் நின்று தூய்மை பணியாளர்களும் சேவை செய்கின்றனர். அவ்வாறு இருக்கையில் அவர்கள் பயன்படுத்தும் பொருட்களும் மருத்துவ உபகரணங்களுக்கு ஈடானது தான் என தங்கள் கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.