காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஜே.ஆர்.எஸ் புரம் கிராமத்தில் விவசாயியான மசனையன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தோட்டத்தில் 3 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிர் சாகுபடி செய்துள்ளார். இதனை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பொருட்டு தோட்டத்திலேயே குடிசை அமைத்து மசனையன் காவல் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து இரவு நேரத்தில் வெளியேறிய காட்டுயானை தோட்டத்திற்குள் நுழைந்துவிட்டது. இதனை அடுத்து காட்டு யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மசனையன் கண்விழித்து பார்த்துள்ளார்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த காட்டு யானை விவசாயியை துதிக்கையால் பிடித்து தூக்கி வீசி காலால் மிதித்து கொன்றுவிட்டது. இதனை தொடர்ந்து மறுநாள் காலை தோட்டத்திற்கு சென்றவர்கள் உடல் நசுங்கிய நிலையில் மசனையன் இறந்து கிடப்பதை பார்த்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மசனையனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.