தேள் கொட்டியதால் மூன்று வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்மனாம்பட்டி பகுதியில் விவசாயியான ஜெய்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தீபா, மோனிகா என்ற 2 மகள்களும் வெற்றிவேல் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் ஜெயகண்ணன் தனது மகனுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த வெற்றிவேலை செந்தேள் ஒன்று கையில் கொட்டியதால் சிறுவன் வலியால் அலறி துடித்தான். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயகண்ணன் தனது மகனை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.