வழக்கறிஞர் வீட்டில் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள வளையசெட்டிபாளையம் பகுதியில் சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞரான மோகன் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி உள்ளார். கடந்த 10-ஆம் தேதி தம்பதியினர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்திற்கு சென்றுள்ளனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு மோகன்ராஜ் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், பத்தாயிரம் ரூபாய் பணம், 2 செல்போன்கள் ஆகியவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மோகன்ராஜ் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வழக்கறிஞரின் வீட்டில் திருடியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தனிப்படை காவல்துறையினர் ராஜ்குமாரை கைது செய்து அவரிடம் இருந்த நகை, செல்போன் மற்றும் பணத்தை மீட்டனர். இதில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் மீது வழிப்பறி, திருட்டு கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.