காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெங்கன்குழி ஆலன்விளை கிராமத்தில் கொச்சைப்பன் பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொச்சைப்பன் பிள்ளை இறந்து விட்டதால் சரஸ்வதி தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சரஸ்வதி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அவரது உறவினர்கள் மூதாட்டியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான அன்னாச்சி பழ தோட்டத்தில் சரஸ்வதி சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூதாட்டி எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.