தோனியா? கங்குலியா? என வந்தால் எனது ஓட்டு கங்குலிக்கு தான் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை வளர்த்தெடுத்த கேப்டன் யார் என்று என்னை கேட்டால் என் ஓட்டு சவுரவ் கங்குலிக்குத்தான் என்று இந்திய விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேல் தெரிவித்துள்ளார். இது குறித்து பார்த்திவ் படேல் கூறுகையில், இரு கேப்டன்களுக்கும் இடையேயுள்ள இந்த போட்டி மதிப்புடையதுதான், ஒருவர் அணியை வளர்த்தெடுத்துள்ளார், ஒருவர் நிறைய கோப்பைகளை வென்றுள்ளார். கங்குலி 2000-ல் கேப்டனாக இருந்த போது இந்திய அணி ஒரு கடினமான, சிக்கல் நிறைந்த சூழலில் இருந்தது. அங்கிருந்து அணியைக் கட்டமைத்து அயல்நாடுகளில் வென்றோம். மேலும் மே.இ.தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் வென்று பாகிஸ்தானில் தொடரையும் வென்றோம். 2003 உலகக்கோப்பையை பார்த்தோமேயானால் இந்திய அணி இறுதிப்போட்டி வரை வரும் என யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தாதா தலைமையில் இறுதி போட்டிக்கு வந்தோம். தோனியைப் பொறுத்தமட்டில் ஏகப்பட்ட ட்ராபிக்களை வென்று கொடுத்துள்ளார். அதிகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்குத்தான். உடைந்த இந்திய அணியை தூக்கி நிறுத்திய கங்குலிக்குத்தான் கேப்டனாக எனது ஓட்டு. நான் 2-3 வருடங்கள் தாதாவின் கேப்டன்சிபில் ஆடியுள்ளேன். அடிலெய்டில் வென்ற போட்டியில் நான் ஸ்டம்பிங்கை விட்டது கூட எனது நினைவில் இருக்கிறது. ஆனால் கேப்டன் கங்குலி வீரர்களை ஆதரிப்பார், யாரும் அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என்ற பயம் வேண்டாம் என்று வீரர்களிடத்தில் நேரடியாகவே கூறுவார். பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியில் கங்குலி சதம் எடுத்த பின் நான் கில்லஸ்பியின் புதியப் பந்தை எதிர்கொண்டு ஆடிய போது ஒவ்வொரு பந்தை ஆடி முடித்த பிறகும் வந்து என்னைப் பாராட்டுவார். இதுதான் தாதாவினுடைய கேப்டன்சி வித்தியாசம். எனக்கு மட்டுமல்ல எல்லா வீரர்களுக்கும் தாதா இப்படிச் செய்துள்ளார் என்று பார்த்திவ் படேல் கூறியுள்ளார்.