19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்துக் கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப்போட்டியில் வெற்றிபெறுவதற்கு வங்கதேச அணியின் முதன்மை மற்றும் முக்கியக் காரணமாக வங்கதேச கேப்டன் அக்பர் அலி இருந்தார். ஒருமுனையில் இருந்துகொண்டு முகத்தில் எவ்வித சலனமுமின்றி வலிமையான இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலைச் சமாளித்து ஆடியது இந்திய ரசிகர்களிடமும் பிரமிப்பை ஏற்படுத்தியது.
இந்திய அணியில் எப்படி டாப் ஆர்டர் வீரர்கள் சொதப்பினால் தோனி டெய்லண்டர்களோடு கூட்டணி அமைத்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வாரோ, இறுதிப்போட்டியின்போது அதே பாணியைத்தான் அக்பர் அலியும் செய்து சாதித்தார். தோனியைப் போல் அக்பர் அலியும் விக்கெட் கீப்பர் என்பதால் வங்கதேச ரசிகர்கள் இவரைத் தோனியுடன் ஒப்பீடு செய்துவருகின்றனர்.
உலகக்கோப்பையை வென்றுள்ளதால் வங்கதேச ரசிகர்களிடையே அக்பர் அலி நேஷனல் ஹீரோவாக வலம்வருகிறார். இவரிடம் தோனியுடனான ஒப்பீடு பற்றி கேட்கையில், ” இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியோடு என்னை ஒப்பீடு செய்வது சரியாக இருக்காது. ஒரே ஒரு ஆட்டத்தைப் பார்த்துவிட்டு என்னை மற்ற லெஜண்ட் வீரர்களோடு ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
யு19 உலகக்கோப்பைத் தொடரின்போது ஐந்து போட்டிகளில் ஆடி மூன்று போட்டிகளில் அக்பர் அலி களமிறங்கினார். அதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டுமே 5 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்ற மூன்று போட்டிகளிலும் 16*, 5*, 43* என நாட் அவுட் பேட்ஸ்மேனாக அக்பர் அலி இருந்தது குறிப்பிடத்தக்கது