தோல்விக்கு காரணம் குறித்து பஞ்சாப் அணி கேப்டன் பேசியுள்ளார்.
மும்பை வான்கடே மைதானத்தில் 15வது சீசன் நேற்று நடந்ததில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. பஞ்சாப் அணி முதலில் களமிறங்கி தொடக்கத்திலிருந்தே விக்கெட்டுகளை இழந்தது. இதில் அதிகபட்சமாக பானுக ராஜபக்ஷ 31(9), ககிசோ ரபாடா 25(16) எடுத்தனர். மற்ற வீரர்களும் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா சற்று தடுமாறி பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாபின் பக்கம் ஆட்டம் திரும்பியது.
அப்போது களமிறங்கிய ஆண்ட்ரோ ரஸல் பந்துகளை விளாசினார். தொடர்ந்து விளையாடிய ரஸல் 12-வது ஓவரில் 4 சிக்சர்கள் அடித்து ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய ரஸல் 31 பந்துகளில் 8 சிக்சர்கள் 2 பவுண்டரி என 70 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடி 14.3 ஓவரிலேயே கொல்கத்தா அணி வெற்றிபெற்றது. இதைத்தொடர்ந்து பேட்டியளித்த பஞ்சாப் அணி கேப்டன் மயங்க் அகர்வால் கூறியுள்ளதாவது, “நாங்கள் சரியாக பேட்டிங் ஆடாதது தான் இந்த தோல்விக்கு காரணம். ரஸல் மிக சிறப்பாக விளையாடினார். எங்களுக்கு ஆரம்பம் நன்றாக அமைந்து இருந்தால் நிச்சயம் 170 ரன்களை எங்களால் எடுத்திருக்க முடியும். ஆனால் நாங்கள் ஆரம்பத்தை சரியாக பயன்படுத்த தவறியதால் தான் தோல்வி அடைந்தோம். தொடக்க போட்டிகளில் இதுபோன்ற தோல்வி சரியானதுதான். எங்கள் தவறுகளை திருத்திக் கொண்டு அடுத்த போட்டியில் வெற்றி அடைவோம்” என அவர் கூறியுள்ளார்.