கோவை மாநகராட்சியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் இளம் பட்டதாரி பெண் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
83-வது வார்டில் களம் காணும் சினேகா மால்யா என்பவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தொலைதூர கல்வியில் 2 முதுநிலை படிப்புகளை பயின்று வரும் சினேகா சமூக வலைத்தளம் வாயிலாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். அரசியலில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று சினேகா மால்யா கூறுகிறார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் பேரணியாக சென்று வேட்புமனு தாக்கல் செய்தனர். 30 வேட்பாளர்களும் தென்கரையில் காந்திசிலை பகுதியிலிருந்து அதிமுக ஆதரவாளர்களோடு ஊர்வலமாக புறப்பட்டு பெரியகுளம் நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர். பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வேட்புமனுக்களை தாக்கல் செய்தார்கள்.
வேட்புமனு தாக்கலுக்காக அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் பேரணியாக சென்றது பெரியகுளத்தில் பரவலாக பேசப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் போட்டியை முறியடிக்க பலமான வேட்பாளர்களை அதிமுக களமிறக்கியுள்ளது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமியின் சொந்த ஊர் என்பதால் காவேரிப்பட்டினம் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடமாக கருதப்படுகிறது. இந்த பகுதியை அதிமுகவிடம் இருந்து கைப்பற்ற திமுக தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது.
திமுகவின் திட்டத்தை தகர்க்கும் வகையில் பலம் பொருந்திய வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது. இதனால் காவிரி பட்டினம் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் களம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோவை மாநகராட்சியில் 77-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சக கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். 77 வது வார்டில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜலட்சுமியை மாற்ற வலியுறுத்தி அதே பகுதியை சேர்ந்த திமுக செயலாளர் மதியழகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பணத்தை பெற்றுக்கொண்டு கட்சியில் இல்லாதவர்களுக்கு சீட்டு வழங்கியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தலில் திமுக கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க போவதில்லை என்று அவர்கள் கூறினர். ஆர்பாட்டம் நடத்திய திமுகவினரை கலைந்து போகுமாறு அறிவுறுத்தியும் கேட்காததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சியில் வேட்புமனுத் தாக்கல் செய்ய சென்ற பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள வார்டுகளில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர். முன்னதாக ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பாஜகவினர் வேட்பாளர்களோடு வெடி வெடித்து ஊர்வலமாக சென்றனர். அப்போது ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் முன் 200 மீட்டர் தொலைவில் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆனால் காவல் துறையினரின் தடுப்புகளை மீறி பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்களுடன் 4 பேர் செல்ல வேண்டும் என கூறினர். இதற்கு அனுமதி மறுத்ததால் பாஜகவினர் காவல்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என பாஜகவினருக்கு அறிவுறுத்தி , வேட்பாளருடன் 2 பேரை மட்டும் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். நகர்ப்புற அரியலூரில் உரிய ஆவணம் இன்றி எடுத்து வரப்பட்ட 2 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நகர்ப்புற தேர்தல் பறக்கும் படை அதிகாரி கணேசன் தலைமையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காரில் வந்த தேன்மொழி என்பவர் கொண்டு வந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம் குறித்து விசாரித்த போது அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் அதிகாரிகள் அந்த இரண்டு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். நகர்ப்புற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரியலூர் மாவட்டத்தில் முதலில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.