தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள் 137 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல் நாளில் அனைத்து பதவி இடங்களுக்கும் சேர்த்து 19 நபர்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்து இருந்தனர். இதையடுத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மனு தாக்கல் இல்லை.
அதனை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக மனு தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. கடந்த 1ஆம் தேதி திமுக, அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான பின் மனுதாக்கல் சூடு பிடித்தது. அதன்பின் கடந்த வியாழக்கிழமை வரையிலும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் கடைசி நாளான நேற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட சுயேட்சைகள் மத்தியில் அதிக ஆர்வம் காணப்பட்டது. அதாவது சுயேட்சைகள், கட்சி வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக நேற்று வேட்புமனு தாக்கல் மையங்கள் களைகட்டியது.
இதனிடையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் வேட்புமனுக்கள் பரிசீலனை இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மொத்தம் 74,416 நபர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.