தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தமாக 36 வார்டுகள் இருக்கின்றன. இந்த வார்டுகளில் பொதுமக்கள் வாக்களிக்க வசதியாக 99 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டபோது, இதில் கலந்து கொள்ளாத அலுவலர்களுக்கு நேற்று மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்துவது எப்படி என்பது தொடர்பாக பயிற்சி நடந்தது. இதில் நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தலைமை தாங்கி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி கொடுத்தார். இதில் கன்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் போன்றவற்றை எவ்வாறு கையாள்வது..? என்பது தொடர்பாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை வைத்து செயல்விளக்கம் காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது.