தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான 21 மாநகராட்சிகள, 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகளில் வார்டு கவுன்சிலர் தேர்தல் நேற்று நடைபெற்றது. வார்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற இந்த தேர்தலில் மொத்தம் 12,838 வார்டுகளில் 60.70% வாக்குகளே பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தர்மபுரி மாவட்டத்தில் 80.49% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தில் 43.59% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பெரும்பாலான பேரூராட்சி, நகராட்சி பகுதிகளை விட சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து கொரோனா பரவல் மூன்று அலைகளிலும் பாதிக்கப்பட்ட பேரூராட்சி, நகராட்சி பகுதிகளை விட சென்னை, கோவை போன்ற மாநகராட்சி பகுதிகளிலேயே உயிரிழப்புகள் அதிகம். ஆனால் கொரோனவால் உயிரிழந்தவர்கள் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிருந்து முழுமையாக நீக்கப்படவில்லை.
மேலும் சென்னையில் இருப்பவர்கள் பலர் வெளியூர்களில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கெல்லாம் சொந்த ஊரில் ஒரு வாக்காளர் அட்டையும் சென்னையில் ஒரு வாக்காளர் அட்டையும் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் என்பதால் சொந்த ஊர்களில் அவர்களின் சொந்தக்காரர்கள், நண்பர்கள், உற்றார் உறவினர் என பலர் தேர்தல் களம் காண்பர். இதனை தொடர்ந்து தேர்தல் நாளன்று பொது விடுமுறை என்பதால் இதனை காரணமாக வைத்து சென்னையில் ஓட்டுரிமை உள்ளவர்கள் பலர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் ஓட்டுரிமை உள்ளவர்கள் சிலர் ஓட்டுப் போடுவதற்கு ஆர்வம் காட்டாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அதனால் தான் மாநகராட்சி பகுதிகளில் குறைந்த அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது.