தமிழகத்தில் மொத்தமுள்ள 138 நகராட்சிகளில் 133 நகராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. அதிமுக வெறும் 2 நகராட்சிகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 3843 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அடுத்தடுத்து அறிவிக்கப்படது. இதில் திமுக சார்பில் 3245 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு களத்தில் நிறுத்தப்பட்டனர். தற்போது முடிவுகள் அறிவிக்கப்பட்ட வரை 2360 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் 3602 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். அவர்களில் 638 வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
அடுத்ததாக காங்கிரஸ் சார்பாக 396 இடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் இதுவரை 151 வார்டுகளில் வெற்றி கிடைத்துள்ளது. தனித்து போட்டியிட்ட பாரதிய ஜனதா சார்பில் 1788 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 56 பேர் வெற்றி பெற்றுள்ளனர். அமமுக சார்பில் 971 வார்டுகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அதில் 33 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பாமக சார்பில் 591 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 48 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தேமுதிக சார்பில் 359 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதில் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 58 வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிட்டதில் 19 வார்டுகளில் அக்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 158 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 41 வார்டுகளிலிருந்து அக்கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 71 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 26 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மதிமுக சார்பில் 76 வேட்பாளர்கள் களம் கண்ட நிலையில் 34 பேர் வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர்.