காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருங்கல் பகுதியில் வசிக்கும் அபிஷா என்ற பெண்ணும், சஜினும் கடந்த 1 1/2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து அபிஷாவிடமிருந்து செல்போனை வாங்கிக் கொண்டனர்.
இதனால் தனது பெற்றோர் வெளியே சென்ற சமயத்தில் அபிஷா அக்கம் பக்கம் இருந்தவர்களின் செல்போனை வாங்கி சஜினை தொடர்பு கொண்டுள்ளார். அப்போது என்னை உடனடியாக அழைத்து செல்லவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அபிஷா கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சஜின் நண்பர்களின் உதவியுடன் அபிஷாவை அழைத்து வந்து கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளார். அதன்பின் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அபிஷாவின் பெற்றோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது நீ அணிந்திருக்கும் நகைகளை கழற்றி தா என அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். இதனால் காவல்துறையினர் முன்னிலையில் அபிஷா தங்க நகைகளை கழற்றி அவரது பெற்றோரிடம் கொடுத்துவிட்டார். அதன்பின் அபிஷாவை சஜினுடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.