தோ்தல் நடத்தை விதிகள் இல்லாத ஊரகப் பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனே தொடங்கிட வேண்டும் என்றும் நகைக் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை உடனடியாக வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்பாக கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு மேற்கொள்ளும் பணி நடைபெற்று வந்தது. அதன்படி 48,84,726 நகைக்கடன் விபரங்கள் அனைத்தும் கணினி மூலமாக பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 கடன்களுக்கு அரசாணையில் கண்டுள்ள நிபந்தனைகளில் கீழ்க்கண்டவற்றின் அடிப்படையில் நகைக்கடன் தள்ளுபடி பெறாத நேர்வுகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஊரக பகுதிகளில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனே செயல்படுத்தும் படி தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளா் சண்முகசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நகைக்கடன் தள்ளுபடியில் தகுதிவாய்ந்த மற்றும் தகுதி பெறாதவா்களுக்கான நிபந்தனைகள், அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். இந்த விதிமுறைகளைப் பின்பற்றி தகுதிவாய்ந்த பயனாளிகளின் பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும். ஆகவே தகுதிபெறாத நபா்களை மிகவும் கவனமுடன் பரிசீலித்து நீக்கிய பிறகே பட்டியலைத் தயாா் செய்ய வேண்டும்.
இதனிடையில் நகைக்கடன் தள்ளுபடியானது அரசாணையில் குறிப்பிடப்பட்ட தகுதிவாய்ந்த பயனாளிக்கு மட்டுமே சென்றடைவதை உறுதிசெய்ய வேண்டும். அதாவது தள்ளுபடிக்கு தகுதியான பயனாளிகளை தோ்வு செய்து, அவா்கள் அடமானம் வைத்த நகை மற்றும் தள்ளுபடிக்கான சான்றிதழை வழங்க வேண்டும். மேலும் பொது நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் வழங்கும் பட்சத்தில் அவா்கள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவராக இருக்கக்கூடாது. அதுமட்டுமல்லாமல் தள்ளுபடி நகைகளுக்கான சான்றிதழ் மற்றும் நகைகளை திரும்ப வழங்கும் பணியில் தோ்தல் பணி அலுவலா்களை ஈடுபடுத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.