தமிழகத்தில் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். ஆனால் தள்ளுபடி வழங்குவதில் பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து பல ஆய்வுகள் நடத்தப்பட்டு, இதில் வங்கி அதிகாரி உட்பட இந்த முறைகேடுக்கு உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. அந்த வகையில் ஏராளமானோர் போலி நகைகளை அடமானம் வைத்து நகைக் கடன் பெறுவது, ஒரேநபர் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிகளில் நகைக்கடன் பெறுவது உள்ளிட்ட பல வகையான முறைகேடுகள் ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதன் காரணமாக தள்ளுபடிக்கு பல நிபந்தனைகளை அரசு அறிவித்து, அதற்கு உட்பட்டவர்களுக்கு தள்ளுபடி வழங்கவேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்தது. அந்த அடிப்படையில் தமிழகத்தில் நகைக் கடன் தள்ளுபடிக்கு 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கின்றனர். எனினும் 14 லட்சம் நபர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என பட்டியல் வெளியாகியது. இப்போது பலயிடங்களில் நகைக்கடன் தள்ளுபடி வழங்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகில் கீழப்பசலை தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்றவர்களில் தகுதியான நபர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அவர்களுக்குரிய நகைகளும், தள்ளுபடிக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் பல முறைகேடுகள் நடைபெறுவதாக பயனாளிகள் புகார் கொடுத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியிருப்பதாவது, நகைக் கடன் தள்ளுபடி பெறப்பட்டதில் தங்களின் நகைக்கு பதில் வேறுஒரு நகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அடமானம் வைக்கப்பட்ட நகைகளை தனியார் நிதிநிறுவனத்தில் மறுஅடகு வைத்து உள்ளனர். அதுமட்டுமல்லாமல் ஒரேநபருக்கு 4 கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. பின் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது என அடுக்கடுக்கான புகார்கள் அளித்துள்ளனர்.