கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் ஐ பெரியசாமி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்த பிறகு நகை கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆட்சிக்கு வந்த பிறகு கடன் விவரங்களை ஆய்வு செய்த போது தான் அதில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள் தெரியவந்தது. நகை கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்ற எண்ணத்தில் தமிழகம் முழுக்க பல்வேறு ஊர்களில் ஒரே நபர் எண்ணற்ற வங்கியில் கடன் பெற்று இருப்பதும், அதற்கு பல வங்கி ஊழியர்கள் உடந்தையாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபோன்று பல சம்பவங்கள் நடந்து உள்ளதால் அது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்திருந்தது. பின்னர் இது குறித்து ஆய்வு செய்த பிறகு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தொடர்ந்து வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களின் விவரங்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வந்தன. இதனால் எப்போது கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களின் மொத்த நகை கடன் 85 ஆயிரம் கோடி என்று கூட்டுறவு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி “கூட்டுறவு சங்கங்களில் வழங்கப்பட்ட நகை கடன்களில் நடைபெற்ற முறைகேடு குறித்து நடத்தப்பட்ட ஆய்வு 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. விவசாயிகளுக்கு வரும் ஜூன் மாதத்திற்குள் 2500 ரூபாய் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 700 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 75 கூட்டுறவு மலிவு விலை மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன” என்ற தகவலையும் அவர் தெரிவித்துள்ளார்.