கூட்டுறவு வங்கியின் முன்பாக அமர்ந்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். அதன்படி கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் வாங்கியவர்களுக்கு 5 சவரன் நகைகள் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். அதன்படி பொதுமக்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வழுதரெட்டி கிராமமக்கள் நகைக்கடன் செய்யுமாறு கூட்டுறவு வங்கியில் கேட்டுள்ளனர். அதற்கு அதிகாரிகள் நகைகடன் தள்ளுபடி பட்டியலில் உங்கள் பெயர் இல்லை என கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வங்கியின் முன்பாக அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பிறகு வங்கி மேலாளரிடம் பொதுமக்கள் நகை கடன் தள்ளுபடி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர் அதற்கு அதிகாரிகள் உங்கள் பெயர் அந்தப் பட்டியலில் இல்லை எனவும், இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளியுங்கள் எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.