திமுக தேர்தல் அறிக்கையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிக்கைகள் அறிவிக்கப்பட்டன. அந்த அறிக்கைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில அறிக்கைகள் மட்டும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இந்நிலையில் அந்த திட்டங்களும் நிறைவேற்றினால் நன்றாக இருக்குமே என்று மக்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களுடைய விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதில் மிக முக்கியமானது கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஆகியவை மக்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இத்திட்டங்கள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசு நினைத்தாலும் நிதிநிலைமை அதற்கு சாதகமாக இல்லை என்பதனால் தாமதம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நகை கடன் தள்ளுபடி பொறுத்தவரை யார் யாருக்கு இந்த சலுகை கிடைக்கும் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 5 பவுண் வரை நகை கடன் பெற்றவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற முடியும்.
ஐந்துக்கும் அதிகமான எடை கொண்ட நகை அடமானமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஐந்து பவுனுக்கு கடனுதவி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும். அடகு வைத்திருப்பவர் பெற்றோரோ அல்லது அவருடைய ரத்த உறவுகளோ அரசு பணியில் இருந்தால் அவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காது. அதேபோல தள்ளுபடி என்பதை இலக்காக வைத்து முறைகேடாக யாராவது நகைக்கடன் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு தள்ளுபடி கிடைக்காது என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.