நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சங்கத்தின் தலைவரும் மள்ளர்சமுத்திரம் பேரூர் அதிமுக செயலாளருமான சுந்தரராஜன் திடீரென்று ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மல்லசமுத்திரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பிமரப்பெட்டி பாலகிருஷ்ணன் என்பவர் அடகு வைத்த இரண்டு வளையல்கள் 5 பவுன் உட்பட தள்ளுபடி கடனுக்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் அதனை ஆய்வு செய்த போது தரமற்ற நகை என்பது தெரியவந்தது.
இதேபோன்று 14 கணக்குகளில் தரமற்ற தங்க நகைகளுக்கு 15 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்திருப்பது ஆய்வுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டது. மேலும் தரம் குறைந்த நகைகளுக்கு கூடுதல் பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து வங்கியில் எழுத்தராகப் பணியாற்றிய மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் மள்ளர்சமுத்திரம் பேரூர் அ.தி.மு.க. செயலாளருமான சுந்தரராஜன் திடீர் ராஜினாமா செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தக் கூட்டுறவு வங்கியில் பயிர்க் கடன் மோசடி நடந்திருப்பதாகவும், வங்கியில் அடகு வைக்கப்பட்டுள்ள மற்ற நகைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.