கடந்த அதிமுக ஆட்சியில் நகைகடனில் பல்வேறு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு தமிழக அரசு அம்பலப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் குரும்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாபெரும் மோசடி நடைபெற்றுள்ளது அம்பலமாகியுள்ளது.
குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் விவரங்களை திருச்செந்தூர் கூட்டுறவு சங்க அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது வங்கியில் நகையே வைக்காமல் போலியான பையை வைத்து அதில் நகை இருப்பது போல கூறி கடன் வாங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த விசாரணையில், வங்கியில் நகைகடன் பெறப்பட்ட 548 நகை பொட்டலங்களில் 271 பொட்டலங்கள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி என்று கூறப்படுகிறது. இதனையடுத்து கூட்டுறவு வங்கியின் தலைவர், செயலாளர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.