நகைக்கடை ஒன்றில் 50 கிலோ வெள்ளியையும் 10,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த கும்பல் 35 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க 50 கிலோ வெள்ளியையும், 10 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஆனால், அந்த கடையில் இருந்த தங்க நகைகளை அவர்கள் கொள்ளையடிக்காமல் சென்றது காவல் துறையினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில்,”கிழக்கு பெங்களூரின் வைட்ஃபீல்ட் உள்ள இம்மாடிஹள்ளி பிரதான சாலையில் அமைந்துள்ள மாதாஜி நகை கடையில் ஆகஸ்ட் 5ம் தேதி அதிகாலை இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
இன்று கடை உரிமையாளர் கடையைத் திறக்கும் போது கடையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளில் இந்த கொள்ளை சம்பவம் பதிவாகி இருந்தது. அதில், இரண்டு ஆண்கள் முதலில் கடையின் கதவை உடைத்து பின்னர் லாக்கரை உடைத்து, அதிலிருந்த வெள்ளி பொருள்களை திருடி தப்பிச் சென்றது பதிவாகியுள்ளது” என்று கூறினார்.
இதையடுத்து, கடை உரிமையாளர் தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் வைட்ஃபீல்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கொள்ளையடித்து சென்ற அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர்.