நகைக்காக பெண்ணை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் சிறுவயல் பகுதியில் உதயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மிளகாய் பறிப்பதற்காக தோட்டத்திற்கு சென்ற அவரது மனைவி ராணி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் ராணியை தேடி மிளகாய் தோட்டத்திற்கு சென்றுள்ளனர். அப்போது ராணி உடலில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, கம்மல் ஆகியவையும் காணமல் போயிருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக நயினார் கோவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ராணியின் உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் ராணி அணிந்திருந்த சங்கிலியை பறிப்பதற்காக கொள்ளையர்கள் அவரை கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதனையறிந்த ராணியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு குற்றவாளிகளை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உறவினர்கள் கலைந்து செல்லாமல் 2-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிகாரி லயோலா இக்னேசியஸ், துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ராணியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அவர்கள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ராணியின் இழப்பிற்கு அரசு நிவாரணம் வழங்கக்கோரியும் கோரிக்கை விடுத்தனர். இதனைதொடர்ந்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்த பின்னரே அவர்கள் ராணியின் உடலை வாங்கிக்கொண்டு கலந்து சென்றனர். இதனால் அப்பப்குதியில் பெரும் பரபரப்பு நிலவியது.