கொலை மிரட்டல் வழக்கில் தம்பதியினருக்கு நீதிமன்றம் ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வாகைகுளத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவனத்தில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தங்க நகைகளை திருப்புவதற்காக ராஜேந்திரன் 45 ஆயிரம் ரூபாய் பணத்தை சண்முகத்திடம் கொடுத்துள்ளார். ஆனால் சண்முகம் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய இருவரும் இணைந்து தங்க நகையை திருப்பி கொடுக்காமல் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சண்முகம் மற்றும் சுதா ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் தம்பதியினருக்கு தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.