மர்ம நபர் தங்க நகையை பறிக்க முயன்ற போது தாய்-மகள் இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தங்கங்குடி கிராமத்தில் சண்முகம்- ராணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஸ்வேதா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ராணி தனது மகளை அழைத்துக்கொண்டு கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது எதிரில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ராணியின் வாகனத்தை மோதுவது போல சென்றுள்ளார். இதனால் நிலைதடுமாறி ராணி தனது குழந்தையுடன் கீழே விழுந்த பிறகு அந்த மர்ம நபர் அவரது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை பார்த்ததும் பொதுமக்கள் அந்த மர்ம நபரை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனையடுத்து படுகாயமடைந்த ராணி மற்றும் அவரது மகளை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.