சென்னையில் நகை வாங்கித் தருமாறு மனைவி தொந்தரவு செய்த காரணத்தால் ஆத்திரமடைந்த கணவர் தனது சொந்த காரை தீ வைத்து எரித்து விட்டு மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்து விட்டதாக நாடகமாடி உள்ளார். சென்னை, மதுரவாயல் கிருஷ்ணா நகர் பகுதியில் சதீஷ் குமார் என்பவர் வசித்துவருகிறார். அவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். அவரது வீட்டில் நிறுத்தியிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிவதை கண்டு அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீர் ஊற்றி அணைத்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது காரில் வந்த ஒரு ஆணும், பெண்ணும் கார் மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காரை விட்டு தனக்கு நகை வாங்கித் தருமாறு மனைவியை தொந்தரவு செய்ததால் மன உளைச்சலில் காரை எரித்து விட்டதாக போலீசாரிடம் சதீஷ் குமார் கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு எச்சரிக்கை விடுத்து போலீசார் ஜாமினில் அனுப்பி வைத்தனர்.