நகைப்பையை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்த டீ கடைக்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
தர்மபுரி ரயில் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மணி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு டீ குடிக்க வந்த ஒருவர் தனது கைப்பையை மறந்து கடையிலேயே வைத்துவிட்டு சென்றார். இதனை அடுத்து கடையை சுத்தம் செய்த மணி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் யாரும் அதனை வாங்க வராததால் மணி பையைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மணி உடனடியாக பையை தர்மபுரி நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதற்கிடையில் கைப்பையை விட்டு சென்ற தீபக் என்பவர் கடைக்கு சென்று மணியிடம் தனது கைப்பை குறித்து கேட்டுள்ளார். அதற்கு கைப்பையை போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்ததாகவும், காவல் நிலையத்திற்கு சென்று பையை வாங்கிக் கொள்ளுங்கள் எனவும் மணி கூறியுள்ளார். இதனால் உரிய ஆவணங்களை காண்பித்து தீபக் தனது நகை பையை வாங்கி சென்றார். சுமார் 12 பவுன் தங்க நகையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த பணியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.