நக்சல் தாக்குதலில் வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சதீஷ்கர் மாநிலம் சுக்மா, பிஜப்பூர் மாவட்ட எல்லைக்கு இடையே உள்ள பாதுகாப்பு பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து 4 போலீசார், துணை ராணுவ படையினர், கோப்ரா சிறப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார் என 1500 வீரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்தக் காட்டுப் பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது காட்டின் மேற்பகுதியில் இருந்து 400 க்கும் மேற்பட்ட நக்சல்கள் வீரர்களை சுற்றிவளைத்து சுட்டதுடன் வெடிகுண்டு தாக்குதலிலும் ஈடுபட்டனர்.
இதில் 22 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 30க்கும் மேற்பட்ட வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சத்தீஸ்கர் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மோதல் நடைபெற்ற பகுதியை நேரில் பார்வையிட்டார். நக்சல் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நக்சல்களை ஒழிப்பதற்கும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.